1ம் தேதி வணிக சிலிண்டர் அதிரடி உயர்வு... வணிகர்கள் அதிர்ச்சி!

 
வணிக சிலிண்டர் வணிக சிலிண்டர்

பாரத், இந்துஸ்தான் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி வருகின்றன. அந்த வகையில் மே மாதத்தின் முதல் நாளான இன்று வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன. அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது பொதுமக்களுக்குப் பெரிய அளவில் நிம்மதியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.

வணிக சிலிண்டர்

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை இன்று முதல் 993 ரூபாய் உயர்ந்து 3,237 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் இதன் விலை 3,071.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 3,202 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநிலங்களுக்கு ஏற்ப இந்த விலை மாறுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த உயர்வும் இன்றி பழைய விலையிலேயே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஹோட்டல் சிலிண்டர்

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். மாதத்தின் முதல் நாளிலேயே சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது சிறு குறு தொழில் செய்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த விலை மாற்றத்தால் பொதுமக்களின் அன்றாட செலவுகள் மேலும் சுமையாகும் சூழல் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.