ஜூன் 30க்குள் PNG க்கு மாறாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!
குழாய் வழி இயற்கை எரிவாயு கட்டமைப்பு வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அதற்கு மாற வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வசதிகள் இருந்தும் இன்னும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய சிலிண்டர்களைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30-ம் தேதியுடன் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் புதிய இணைப்புக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக மத்திய அரசு வழங்கிய 3 மாத காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளதால் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குழாய் வழி இணைப்பு இன்னும் கிடைக்காத பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டமைப்பு வசதிகள் முழுமையாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் புதிய முறைக்கு மாறுவதை அரசு கட்டாயமாக்கி வருகிறது.
பாதுகாப்பான மற்றும் எளிமையான இந்த புதிய திட்டத்தை மக்கள் மத்தியில் முழுமையாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விதியினால் பாதிக்கப்படாமல் இருக்க பொதுமக்கள் தங்களின் பகுதி முகவர்களை அணுகி உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். ஜூன் மாத இறுதிக்குள் இந்த மாற்றங்களைச் செய்து முடிக்கத் தவறும் பட்சத்தில் சிலிண்டர் விநியோகம் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
