பள்ளியில் சமையல் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்... பெரும் பரபரப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த அரசுப் பள்ளியில் சுமார் 33 பள்ளி மாணவர்கள் தங்களின் கல்வியைப் பயின்று வருகிறார்கள். நீண்ட கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளான இன்று, அனைத்து மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களின் வகுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர்.

மாணவர்களுக்குத் தேவையான சத்துணவு மதிய உணவு சமைப்பதற்காக ஊழியர்கள் வழக்கம் போலப் பள்ளி சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகச் சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சத்துணவு ஊழியர்கள் அங்கிருந்த தீயணைப்பான் கருவியைப் பயன்படுத்த முயன்றும் அது சரியாக வேலை செய்யாததால் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர்.
இதனால் சமையலறையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு வகுப்பறைகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். உடனடியாக அங்கு திரண்ட அருகில் இருந்த பொதுமக்கள் எரிந்து கொண்டிருந்த சிலிண்டரை ஈரமான கோணிப்பைகளைக் கொண்டு மூடித் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். இந்த எதிர்பாராத விபத்து காரணமாக அந்தப் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
