அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு - மத்திய அரசு அதிரடி!

 
அகவிலைப்படி அகவிலைப்படி


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஏப். 18 ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போதுள்ள 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய ஆறுதலாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத கால நிலுவைத் தொகை (அரியர்ஸ்) விரைவில் வழங்கப்பட உள்ளது. வழக்கமாக மார்ச் மாதமே அறிவிக்கப்பட வேண்டிய இந்த உயர்வு, நிர்வாகக் காரணங்களால் சற்றே தாமதமானாலும், தற்போது முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்களிடையே நிலவி வந்த எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. 

 

மத்திய அரசின் இந்த அதிரடி முடிவின் மூலம் சுமார் 50.46 லட்சம் அரசு ஊழியர்களும், 68.27 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினால் அரசுக்கு ஆண்டுக்கு 6,791.24 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கத்தைச் சமாளிக்கும் வகையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டு, அடுத்த மாதச் சம்பளத்துடன் கூடுதல் தொகை வரவு வைக்கப்படும் எனத் தெரிகிறது.