அடக் கொடுமையே... திரிஷா விஜய், விஜய் செல்வம் பெயர்களில் போலி புத்தகங்கள்... பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் முறைகேடு!
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல லட்சம் ரூபாய் அளவிற்குப் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் சான்றுகளுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது தமிழ் இலக்கிய மற்றும் பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் 'சிந்தை' இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் வாயிலாகக் கோவை பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் குறித்து விரிவான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். நூலகத்திற்குப் புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் ஏறத்தாழ 1,800 நூல்கள் 'அகல்விளக்கு பதிப்பகம்' என்ற ஒரே பதிப்பகத்தின் பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளன.

வெறும் 300 பக்கங்கள் மட்டுமே கொண்ட சாதாரண நூல்களுக்கு ரூ.1,395 மற்றும் ரூ.1,445 என மிக அதிகளவில் அநியாயமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுப் புத்தகக் கொள்முதல் கணக்கு காட்டப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் குற்றச்சாட்டத் தொடர்ந்து, கோவை பெரியார் அறிவுலகத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பகப் புத்தகங்களை நேரில் ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அகல்விளக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்களில் கடந்த ஜூன் மாதம் தேதியிட்டு அவசர அவசரமாகச் சீல் வைக்கப்பட்டுள்ளது. வெறும் இரண்டு புத்தகங்களில் மட்டுமே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத் தேதியிட்ட சீல்கள் உள்ளன. மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, 'திரிஷா விஜய்', 'விஜய் செல்வம்' போன்ற பெயர்களில் போலி எழுத்தாளர்களை உருவாக்கி, அவர்களது பெயர்களில் போலிப் புத்தகங்களைத் தயாரித்து நூலகக் கொள்முதலில் முறைகேடு செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோவையின் முக்கியமான அறிவு மையமாக விளங்கும் பெரியார் அறிவுலகத்தில், போலி எழுத்தாளர்களின் பெயர்களிலும் ஒரே பதிப்பகத்தின் வாயிலாகவும் பல மடங்கு அதிக விலைக்குப் புத்தகங்களை வாங்கி நிதி முறைகேடு செய்திருப்பது குறித்துப் விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
