சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்... முரசு புயலால் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
முரசு புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 மணி நேரத்தில் மாதவரத்தில் 11 செ.மீ., எண்ணூரில் 10 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 8.7 செ.மீ. மழை பதிவானதாகக் கூறப்பட்டுள்ளது. புயல் மெதுவாக நகரக்கூடும் அல்லது சில மணி நேரம் ஒரே இடத்தில் நிலைக்கக்கூடும் என்பதால் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் எச்சரித்துள்ளார்.

அவரது கணிப்பின்படி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கடலோரப் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், வட தமிழகக் கடல் பகுதிகளில் சீற்றம் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர மக்கள் வானிலை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
