தாயின் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மகள்! கேரளாவில் கொடூரம்!

 
தாய் மகள் கொதிக்கும் நீர்

கேரள மாநிலத்தில் சொத்துத் தகராறு காரணமாகத் தனது வயதான தாயின் மீது கொதிக்கும் நீரை ஊற்றிக் கொடுமைப்படுத்திய வழக்கில், தலைமறைவாக இருந்த மகள் அஷ்வதி அச்சுவை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி (61). இவருக்கும் இவரது மகள் அஷ்வதி அச்சு என்பவருக்கும் இடையே நீண்டகாலமாகச் சொத்துப் பிரிப்பது தொடர்பாகத் தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ராதாமணியின் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்பட்டது. இதில் அவரது முகம், கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொதிக்கும் எண்ணெய்

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், முதல்கட்டமாக அஷ்வதியின் மகளான 18 வயது அம்ருதாவைக் கைது செய்தனர். காவலில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, தனது தாய் அஷ்வதியின் தூண்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் பேரிலேயே பாட்டி ராதாமணி மீது கொதிக்கும் நீரை ஊற்றியதாக அம்ருதா வாக்குமூலம் அளித்தார்.

பேத்தியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, இச்சம்பவத்திற்கு முக்கியக் காரணமான அஷ்வதி அச்சு தலைமறைவானார். தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வந்த காவல்துறையினர், இறுதியில் தலைமறைவாக இருந்த அஷ்வதி அச்சுவை மடக்கிப் பிடித்துக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்துக்காகச் சொந்தத் தாயையே பேத்தி மற்றும் மகள சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.