தந்தையின் உடலை 4 ஆண்டுகள் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்த மகள் - மும்பையில் அதிர்ச்சி!

 
தந்தையின் உடலை குளிர்சாதனத்தில்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், தந்தையின் பிரிவைத் தாங்க முடியாத மகள் ஒருவர், அவர் உயிரிழந்த பிறகும் அவரது உடலைச் சுமார் 4 ஆண்டுகளாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மலாடு கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பகல்நேர காப்பக மையத்தை மறுஉருவாக்கப் பணிகளுக்காகக் காலி செய்யுமாறு நில உரிமையாளர் கோரியுள்ளார். அப்போது அங்கு நடத்தப்பட்ட சோதனையில், பெரிய குளிர்சாதனப் பெட்டிக்குள் மனித உடல் அழுகிய நிலையில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த முதியவர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், முதியவர் இயற்கை மரணம் அடைந்ததற்கான மருத்துவ இறப்புச் சான்றிதழையும் அவரது மகள் அப்போதே பெற்றிருந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

தந்தையின் மீது கொண்டிருந்த தீவிர பாசத்தின் காரணமாக அவரது மரணத்தை மகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடல் அழியாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 2022 ஜூன் முதல் அந்த காப்பக மையத்திற்குள் இருந்த பெரிய குளிர்சாதனப் பெட்டிக்குள்ளேயே தந்தையின் உடலைப் பாதுகாத்து வந்துள்ளார்.

அந்த காப்பக மையம் ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாகச் செயல்படுவதை நிறுத்தியிருந்த நிலையில், கட்டிடத்தைக் காலி செய்யும் நடவடிக்கையின்போதே இந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.