போதையில் கிணற்றில் குதிக்கப் பாய்ந்த தந்தையைத் தடுக்க முயன்ற மகள் கால் இடறி 100 அடி ஆழ கிணற்றில் விழுந்து பலி!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேயூர் கிராமப் பகுதியில், குடிபோதையால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, ஒரு பிளஸ்-2 மாணவியின் உயிரைப் பறித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அடுத்த சேயூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). இவரது இளைய மகள் ரித்திகா (17). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில், ரவிச்சந்திரன் நேற்று நள்ளிரவில் வழக்கம் போல் மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். கணவரின் இந்தத் தொடர் குடிப்பழக்கத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவரது மனைவி, ரவிச்சந்திரனை வாசலிலேயே வைத்து கண்டித்துள்ளார்.
இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே நள்ளிரவில் வாய்த்தகராறு வெடித்தது. போதையின் உச்சத்துக்கே சென்ற ரவிச்சந்திரன், "நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்று ஆத்திரத்தில் கத்தியபடி, தங்களது வீட்டின் அருகே இருந்த 100 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றை நோக்கிப் பாய்ந்து ஓடியுள்ளார்.

கண் இமைக்கும் நேரத்திற்குள் தந்தை கிணற்றில் குதிக்க ஓடுவதைக் கண்டு அலறியடித்த இளைய மகள் ரித்திகா, பாசப் போராட்டத்தில் தந்தையின் உயிரைக் காப்பாற்ற அவரைப் பின்னாடியே துரத்திக் கொண்டு ஓடிப் போய்த் தடுக்க முயன்றுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதாலும், போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்திருந்த நிலையில் தந்தையைப் பிடித்து இழுக்கும் முயற்சியில் நிலைதடுமாறிய மாணவி ரித்திகா, எதிர்பாராத விதமாகக் கால் இடறி 100 அடி ஆழ வறண்ட கிணற்றுக்குள் தலைகீழாகப் பாய்ந்து விழுந்தார்.
வறண்ட பாறைகள் நிறைந்த 100 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த தாக்கத்தில், மாணவி ரித்திகாவுக்குத் தலையிலும், உடலின் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். பெற்ற மகளே கண்முன்னே கிணற்றில் விழுந்து பலியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக சேயூர் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி மாணவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்துயரச் சம்பவம் குறித்து அவிநாசி மற்றும் சேயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையால் ஏற்பட்ட குடும்பச் சண்டையில், தந்தையைக் காப்பாற்றப் போய் 17 வயது பிளஸ்-2 மாணவி வறண்ட கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அவிநாசி வட்டார மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
