காதலுக்காகத் தந்தையைக் கொன்ற மகள்.. 'பிரேக்கப்' ஆனதால் ரகசியத்தை உடைத்த காதலன்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயந்த் பல்லவாரின் மரணம், தற்போது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது. காதலுக்குத் தடையாக இருந்த தந்தையை, அவரது மகளே விஷம் கொடுத்துக் கொன்றது அம்பலமாகியுள்ளது.
காவல்துறை அதிகாரியான ஜெயந்த் பல்லவாரின் மகள் ஆர்யா, ஆஷிஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குத் தந்தை ஜெயந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்யா, தனது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த தந்தையைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
கடந்த 2023ம் ஆண்டு ஒரு நாள், தந்தை குடிக்கும் 'மில்க் ஷேக்'கில் ஆர்யா ரகசியமாக விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்த சிறிது நேரத்திலேயே ஜெயந்த் பல்லவார் பரிதாபமாக உயிரிழந்தார். அந்தச் சமயத்தில் இது மாரடைப்பால் ஏற்பட்ட இயற்கை மரணம் எனக் கருதப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தந்தையின் மறைவிற்குப் பிறகு, ஆர்யா தான் ஆசைப்பட்டபடியே காதலன் ஆஷிஷைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டு 'பிரேக்கப்' செய்யும் சூழல் உருவானது.
தன்னை விட்டுப் பிரிய நினைத்த ஆர்யா மீது ஆத்திரமடைந்த ஆஷிஷ், தனது மாமனார் மரணத்தில் இருந்த மர்மத்தை உடைக்க முடிவு செய்தார். நேரடியாகக் காவல்துறையை அணுகிய அவர், ஆர்யா தனது தந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சித் தகவலை வாக்குமூலமாக அளித்தார்.
ஆஷிஷ் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கை மீண்டும் கையில் எடுத்த மகாராஷ்டிரா காவல்துறையினர், ஆர்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இறுதியில் அவர் தனது தந்தையைக் கொன்றதை ஒப்புக் கொண்டார். இந்தச் சதித் திட்டத்திற்கு உடந்தையாக இருந்த ஆர்யா மற்றும் அவரது கணவர் ஆஷிஷ் உள்ளிட்ட மொத்தம் 4 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
