மகளின் காதலன் கொலை... கைதான தந்தை, மகன் தவெகவில் இருந்து நீக்கம்!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தையூரில் நடைபெற்ற காதல் விவகாரக் கொலை வழக்கில் கைதான நபர்கள், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
தையூரைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இக்காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 16-ஆம் தேதி, பெண்ணின் சித்தப்பா மணிகண்டன் என்பவர் பிரவீனைச் சாலையில் வழிமறித்துக் காதலைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளார். பிரவீன் அதற்கு மறுக்கவே, தனது அண்ணன் ஏழுமலை மற்றும் அவரது மகன் கவுதமிற்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு கத்தியுடன் வந்த ஏழுமலை, கவுதம் மற்றும் அவரது நண்பர் நித்திஷ் ஆகிய மூவரும் சேர்ந்து பிரவீன் குமாரைக் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர். தீவிர சிகிச்சையிலிருந்த பிரவீன் குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடூரக் கொலை வழக்கில் பெண்ணின் தந்தை ஏழுமலை, சகோதரன் கவுதம், மணிகண்டன் மற்றும் நித்திஷ் ஆகிய 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதான ஏழுமலை மற்றும் கவுதம் ஆகிய இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இருந்தது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதாகத் தவெக தலைமை அறிவித்துள்ளது. இது குறித்துச் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் குமரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொலை வழக்கில் கைதான இருவரும் 'TVK Family' இணையதளம் மூலம் அடிப்படை உறுப்பினராக மட்டுமே சேர்ந்தவர்கள்; அவர்கள் கட்சியின் பொறுப்பாளர்களோ அல்லது நிர்வாகிகளோ அல்ல" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
