தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்புடைய தாதா என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

 
தாவூத்

 

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் பகுதியில், தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரபல தாதா நசீம் துர்ரானி போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலை, கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காசியாபாத்தைச் சேர்ந்த நசீம் துர்ரானி, கடந்த 16-ந்தேதி டெல்லியின் சோனியா விஹார் பகுதியில் சமீர் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என போலீசார் சந்தேகித்தனர். டெல்லி சட்டத்துறை மந்திரி கபில் மிஸ்ராவின் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, நசீம் துர்ரானியை போலீசார் தேடி வந்தனர்.

Gangster Naseem linked to Dawood Ibrahim killed in UP encounter

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டம் சிக்கந்திரா பகுதியில் நசீம் துர்ரானி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி போலீசாரின் குற்றப்பிரிவு மற்றும் உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Naseem Durrani: Dawood Ibrahim-linked gangster Naseem Durrani shot dead in Uttar Pradesh encounter - The Economic Times

அப்போது இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற நசீம் துர்ரானியை போலீசார் சுற்றிவளைத்தனர். அவரைப் பிடிக்க முயன்றபோது போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து நசீம் துர்ரானி பயன்படுத்திய 2 கைத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், அவரைப் பிடிக்க ரூ.50 ஆயிரம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் டி-கம்பெனியுடன் நசீம் துர்ரானிக்கு தொடர்பு இருந்ததாகவும், சோட்டா ஷகீலுடன் நெருக்கமாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2016-17-ம் ஆண்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாதா சோட்டா ராஜனை கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தை சோட்டா ஷகீல், நசீம் துர்ரானியிடம் வழங்கியதாகவும் போலீசார் கூறியுள்ளனர்