பகீர்... ’டே கேரில் ‘அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினில் தள்ளுவது, டாய்லெட் தண்ணீரை பீய்ச்சியடித்தல்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
பெங்களூருவில் உள்ள கேப்ஜெமினி நிறுவனத்தின் கார்ப்பரேட் வளாகத்திற்குள் இயங்கி வரும் பகல்நேரப் பராமரிப்பு மையத்தில், பிஞ்சு குழந்தைகள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள குழந்தைகள் அழுததற்காக அவர்களைச் சலவை இயந்திரத்தின் உருளைக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளுவதும், வாயில் டாய்லெட் ஜெட் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதும், குளியலறைக்குள் பூட்டி வைப்பதும் போன்ற நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விபரீத சம்பவம் தொடர்பாகப் பெங்களூரு எச்.ஏ.எல். காவல் நிலைய போலீசார் தங்களின் முதல் கைது நடவடிக்கையை முறைப்படி மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் கொடூர சித்திரவதை வீடியோவில் சிக்கிய முக்கியக் குற்றவாளியான விஜயலட்சுமி என்ற காப்பக ஊழியப் பெண்ணைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைதான அந்தப் பெண் உட்பட 5 காப்பக ஊழியர்கள் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய காப்பகத்தைச் சேர்ந்த மற்ற நபர்களுக்கும் போலீசார் முறைப்படி நோட்டீஸ் அனுப்பித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொடூர விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கேப்ஜெமினி நிறுவனம் தனது வளாகத்தில் உள்ள அந்தப் பகல்நேரப் பராமரிப்பு மையத்தைத் தற்காலிகமாக முழுமையாக மூடியுள்ளது. தங்களின் ஊழியர்களின் குழந்தைகளின் பாதுகாப்பிற்குத் தான் முதலிடம் என்றும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தைக் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் கையில் எடுத்துத் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
