பயங்கரம்... கார் தீப்பிடித்து சிறுமி உட்பட 5 பேர் உடல் கருகி பலி!

 
accident accident

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே டெல்லி - மும்பை விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில், ஒரு சிறுமி உட்பட 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் வைஷ்ணோ தேவி யாத்திரையை முடித்துவிட்டு தங்களது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீ மளமளவெனப் பரவியதால், உள்ளே இருந்தவர்களால் உடனடியாக வெளியே வர முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தின்போது காரின் உரிமையாளர் வினோத் குமார் மட்டும் சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்ட அங்கிருந்தவர்கள், சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 15 நிமிடங்களில் தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும் அதற்குள்ளாகவே காரில் இருந்த 5 உயிர்களும் பறிபோனது அங்கிருந்தவர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியது.

மகிழ்ச்சியாகச் சென்ற ஆன்மீகப் பயணம் மரணத்தில் முடிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கார் தீப்பிடித்ததற்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.