மரண ஓலம்... கோர விபத்து... ஸ்பெயினில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி 68 பேர் பலி; 200 பேர் படுகாயம்!
ஸ்பெயின் நாட்டின் டோலிடோ மாகாணத்தில் உள்ள மாட்ரிட் - செவில்லே அதிவேக ரயில் பாதையில், இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.
மாட்ரிட் நகரில் இருந்து செவில்லே நோக்கிச் சென்று கொண்டிருந்த 'இரியோ' நிறுவனத்தின் அதிவேக ரயில், சிக்னல் கோளாறு காரணமாக வழியில் நின்றுகொண்டிருந்தது. அப்போது அதே பாதையில் பின்னால் வந்த 'ஏவிஇ' அதிவேக ரயில், நின்றுகொண்டிருந்த ரயிலின் பின்புறம் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிப் பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில் சில பெட்டிகள் முற்றிலுமாக நசுங்கித் தரைமட்டமாகின.
இந்த கோர விபத்தில் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 179 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து மாட்ரிட், சியுடாட் ரியல் மற்றும் அண்டலூசியா இடையிலான அதிவேக ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தானியங்கி சிக்னல் அமைப்பு பழுதடைந்ததை அடுத்து, மனிதக் கட்டுப்பாட்டின் கீழ் சிக்னல் இயக்கப்பட்டபோது ஏற்பட்ட தவறே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து ஸ்பெயின் நாட்டின் ரயில்வே ஆணையம் விரிவான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
