சிறைக்கைதி மரண விவகாரம்.. எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் – இதுவரை 11 பேர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், தற்பொழுது சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஒருவரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வழக்கில், மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில், சிறையில் இருந்த சபரிவர்மன் திடீரென உயிரிழந்தார். இந்த மரணம் பெரும் சர்ச்சையையும், சந்தேகங்களையும் கிளப்பியது.

சபரிவர்மன் மரணமடைந்த வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் ப்ளசிங் என்பவரைத் தற்பொழுது பணியிட மாற்றம் செய்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அவர் உடனடியாக ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, போலீசாரின் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் தொடர்புடையதாக இதுவரை சிறை வார்டன்கள் – 3 பேர், சக கைதிகள் – 8 பேர் என மொத்தம் 11 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணைகள் தீவிரமாக முடுக்கப்பட்டுள்ளன.
