பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் - மின்னஞ்சல் மிரட்டலால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு!

 
மோடி மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ஹரியானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஏப்ரல் 23 வந்த ஒரு மர்ம மின்னஞ்சலில், நாளை ஏப்ரல் 24 அன்று இவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் கிடைத்தவுடன் மத்திய மற்றும் மாநிலப் பாதுகாப்பு முகமைகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மோடி

குறிப்பாக அந்த மின்னஞ்சலில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள முக்கிய ரயில்வே தண்டவாளங்களில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் லூதியானா, அமிர்தசரஸ் மற்றும் பட்டிண்டா உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோடி

இந்த மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது மற்றும் இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த சில வாரங்களாகப் பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு இதுபோன்ற போலி மிரட்டல்கள் வந்த நிலையில், தற்போது நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு மிரட்டல் வந்திருப்பதை அதிகாரிகள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர். மிரட்டல் வந்த பகுதியைச் சுற்றியுள்ள ரயில்வே தண்டவாளங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.