சத்தீஸ்கர் பாய்லர் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு.. ஏன் 'பாய்லர்' வெடித்தது? அதிர்ச்சியளிக்கும் தொழில்நுட்ப அறிக்கை!
சத்தீஸ்கர் மாநிலம், சக்தி மாவட்டம் சிங்கிதாரி கிராமத்தில் உள்ள வேதாந்தா அனல் மின் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது. ஆலைக்குள் திடீரென பாய்லர் வெடித்துச் சிதறியதில், அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். இந்த விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர்.

தடய அறிவியல் ஆய்வகம் மற்றும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்து குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாய்லரில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு எரிபொருளைச் சேமித்து வைத்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம். எரிபொருள் அதிகரித்ததால் பாய்லருக்குள் அழுத்தம் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

கடந்த ஓராண்டாகவே இந்த ஆலையில் அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. ஆனால், முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்ததே இந்தத் துயரத்திற்கு வழிவகுத்துள்ளது. சிகிச்சை பலனின்றி பலியானவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், ஆலை நிர்வாகம் மீதான சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
