கேரளா கனமழை மற்றும் வெள்ளம் - பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

 
கேரளா கனமழை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம், வயநாடு, இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். மாயமான 4 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா கனமழை வெள்ளம்

பாதுகாப்பு கருதி வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இறுதிக் சடங்குகளை மேற்கொள்வதற்காக உடனடியாக ரூ.10,000 வழங்கவும், முகாம்களில் இருந்து வீடுகளுக்குத் திரும்பும் குடும்பங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்தத் தலா ரூ.10,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை நிலவுவதால், ஆற்றங்கரையோரங்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்குப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.