ம.பி.யில் கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு - 16 பேர் கைது!
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாகப் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டம் பராஜ் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்ததன் காரணமாகக் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பலனின்றி ஆரம்பத்தில் சிலர் உயிரிழந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 'சாகர் கோல்ட்' எனும் மதுபானத்தின் பெயரில் போலியாக விற்கப்பட்ட நச்சுத் கள்ளச்சாராயத்தைக் குடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
