பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல் - பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள மசூதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் கோஹட் நகரில் அமைந்துள்ள மாவட்டக் காவல் துறை தலைமை அலுவலகக் கட்டிடத்திற்குள் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலமான மசூதி இயங்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அங்கு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் அந்தக் கட்டிடத்தின் மீது மோதி பயங்கரமான முறையில் வெடித்தது.

கார் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மசூதி மற்றும் காவல் துறை தலைமையகத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் முதற்கட்டமாக 16 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 16 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட காவல் துறை தலைமை அலுவலகக் கட்டிடத்தில் இன்னும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், பாதுகாப்புப் படையினருக்கும் அவர்களுக்கும் இடையே தொடர் மோதல் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோஹட் நகரில் பொதுமக்கள் மற்றும் காவலர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு 'தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்' அமைப்பின் கிளை அமைப்பான 'இத்ஹத் உல் முஜாஹிதீன் பாகிஸ்தான்' என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
