காசாவில் உயிரிழப்பு அதிகரிப்பு... 72,819 பேர் பலி!

 
காசா காசா

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, காசா பகுதியை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் மிகக் கடுமையான போரைத் தொடங்கியது. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு (2025) அக்டோபர் 11 அன்று முறைப்படி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆங்காங்கே நீடித்து வரும் மோதல்கள் மற்றும் தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, காசாவில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 72,000-ஐக் கடந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தரவுகளின்படி, போர் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் அதிர வைத்திருக்கிறது.  2023 அக்டோபரில் போர் தொடங்கியது முதல் தற்போது வரை காசாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 72,819 ஆக உயர்ந்துள்ளது.

காஸா

வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் சிக்கி இதுவரை 1,72,894 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் காசாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மருத்துவமனைகளுக்கு 16 உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன மற்றும் 39 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2025 அக்டோபர் 11-ம் தேதி இருதரப்பிற்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் உடன்பாடு எட்டப்பட்டது. எனினும், அதன் பின்னரும் முழுமையான அமைதி திரும்பவில்லை என்பதைத் தரவுகள் காட்டுகின்றன. போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில் மட்டும் காசா பகுதியில் பல்வேறு மோதல்களில் சிக்கி 922 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2,786 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா இஸ்ரேல்

போர் நிறுத்தத்திற்குப் பிறகு சிதைந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே இருந்து இதுவரை 781 உடல்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன. இன்றும் பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் காசாவின் முக்கியச் சாலைகளிலும், தரைமட்டமாக்கப்பட்ட குடியிருப்பு கட்டடங்களின் இடிபாடுகளுக்கு அடியிலும் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளை அகற்றுவதற்கான கனரக இயந்திரங்களின் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிடுவதில் தொடர்ந்து தொய்வு நிலவி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து அகதி முகாம்களில் தவித்து வரும் சூழலில், காசாவின் மனிதநேய அவலநிலை உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.