பாகிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!

 
பாகிஸ்தான் கனமழை வெள்ளப்பெருக்கு

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடு முழுவதும் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தென்மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளான கைபர் பக்துவா மற்றும் பஞ்சாப் மாகாணங்களிலேயே அதிகளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கனமழை

பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 340-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல பலியான சம்பவங்கள் பழைய வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்ததாலும், மின்சாரம் தாக்கியதாலும், வெள்ள நீரில் மூழ்கியதாலுமே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், ஆற்றங்கரையோரம் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.