பாக்கிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு!
பாகிஸ்தானில் தனியார் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 34 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட மொத்தம் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத் தலைநகரான பெஷாவரில் உள்ள தார் காலனி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்த வகுப்பறையின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் திடீரென இடிந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினரும் காவல்துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் 13 வயதுக்குட்பட்ட 34 பள்ளி மாணவர்களும், ஒரு பெண் ஆசிரியரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதி குறுகலான தெருக்களால் சூழப்பட்டிருப்பதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது; இருப்பினும், காவல்துறையினர் உடனடியாகச் சிறப்பு வழித்தடங்களை அமைத்துக் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், எவ்விதக் கட்டிட விதிமுறைகளையும் பின்பற்றாமல், தரம் குறைந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி மேற்கூரை கட்டப்பட்டதே இந்தப் பெருந்துயரத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் இந்தப் பள்ளியை நடத்தி வந்த அதன் உரிமையாளரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சிறு குழந்தைகள் பலியான இச்சம்பவத்திற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் மாகாண கவர்னர் பைசல் கரீம் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
