பொலிவியா ராணுவ தளத்தில் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு; 84 பேர் படுகாயம்!

 
பொலிவியா

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் அமைந்துள்ள ராணுவத் தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

பொலிவியா நாட்டின் இங்கவி மாகாணம் வியாச்சா நகரில் ராணுவத் தளம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ராணுவத் தளத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி இந்த ராணுவத் தளத்தில் உள்ள பீரங்கி படைப்பிரிவில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் வெளியான முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த பயங்கர வெடி விபத்தில் மொத்தம் 84 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 7 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத் தளத்தில் இவ்வளவு பெரிய விபத்து ஏற்படுவதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.