சட்டசபையில் நாளை துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் தொடக்கம்!
தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடுகிறது. இதில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்குகின்றன.
2026-2027-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ஆம் தேதியும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதற்கான பதிலுரையை நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் சட்டசபையில் அளித்தனர்.

ஆகஸ்ட் 13 (வியாழன்), 14 (வெள்ளி) ஆகிய தேதிகளில் அவைக் கூட்டம் நடைபெறவில்லை. தொடர்ந்து ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) மற்றும் ஆகஸ்ட் 16 (ஞாயிறு) அரசு விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
4 நாட்கள் விடுமுறைக்குப் பின், நாளை திங்கட்கிழமை சட்டசபைக் கூட்டம் மீண்டும் தொடங்கும். நாளைய கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மற்றும் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய முக்கியத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறவுள்ளது.
