"தவெக ஆட்சியில் கடன் ரூ.20 லட்சம் கோடியாகும்" - தங்கம் தென்னரசு பதிலடி!

 
தங்கம் தென்னரசு தங்கம் தென்னரசு

தமிழக அரசின் நிதிநிலை குறித்து புதிய தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒரு "வெற்று அறிக்கை" என்று விமர்சித்துள்ள திமுக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு, தவெகவின் சாத்தியமில்லாத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முற்பட்டால் அக்கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவில் தமிழகத்தின் கடன் சுமை ரூ. 20 லட்சம் கோடியாக உயரும் என எச்சரித்துள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசு தேர்தலின் போது "வாணவேடிக்கை போன்ற" கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால், நிதித்துறையின் ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்டு, இப்போது தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த வெள்ளை அறிக்கையை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்துகிறது.

தங்கம் தென்னரசு

தவெக அறிவித்துள்ள மகளிருக்கான ரூ. 2,500 உதவித்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம், 6 இலவச சமையல் சிலிண்டர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை போன்ற திட்டங்களை மட்டுமே செயல்படுத்த ஆண்டுக்குக் கூடுதல் நிதி தேவைப்படும். இந்த வாக்குறுதிகளை 5 ஆண்டுகள் நிறைவேற்றினால், தவெக ஆட்சி முடிவில் தமிழகத்தின் கடன் தற்போதைய அளவிலிருந்து ரூ. 20 லட்சம் கோடியாக எகிறிவிடும்.

தவெகவின் இந்த இலவச வாக்குறுதிகளுக்கான செலவினங்களை 'மூலதனச் செலவு'  என்று கணக்குக் காட்ட முடியுமா? மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசு கடன் வாங்குவதில் எவ்விதத் தவறும் இல்லை.

நிதியமைச்சர் மரிய வில்சன்

தவெக அரசின் வெள்ளை அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியில் கடன் இரட்டிப்பாகிவிட்டதாகக் கூறப்பட்டதற்குத் தங்கம் தென்னரசு, "திமுக அரசு செயல்படுத்திய மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், காலை உணவுத் திட்டம் மற்றும் மகளிர்க்கான விடியாப் பயண இலவசப் பேருந்து வசதி போன்ற நல்ல திட்டங்களைத் தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில், தங்களது புதிய தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, ஆண்டுச் சராசரிக் கடன் வாங்கும் அளவையும் திமுக ஆட்சிக் காலத்தை விடக் குறைத்துக் காட்டட்டும். அப்படிச் செய்து காட்டினால், நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளையும் உடனடியாகத் துறக்கத் தயாராக இருக்கிறேன்" என்று சவால் விட்டார்.

குஜராத் போன்ற மாநிலங்களில் 'மகளிர் உரிமைத் தொகை'யோ, 'காலை உணவுத் திட்டம்' போன்ற மக்கள் நலத்திட்டங்களோ கிடையாது என்பதால் அங்கு வட்டிச் சுமை குறைவாகத் தெரிவதாகக் குறிப்பிட்ட அவர், உதயதரா மேம்பாடு மற்றும் மின்சாரத் துறை சீரமைப்புகளால் தான் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதே தவிர நிர்வாகத் திறமையின்மையால் அல்ல என்றும் விளக்கமளித்தார். தவெக அரசுக்குத் தங்கம் தென்னரசு விடுத்துள்ள இந்த நேரடிச் சவால் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.