UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை கட்டணம் விதிக்க முடிவு - யார், யாரிடம் வசூலிக்கப்படும்? முழு விபரம்!
இந்தியாவில் பெரும்பான்மையான பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, பெரிய வணிக நிறுவனங்களுக்கு மட்டும் புதிய கட்டண முறையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடிக்கு மேல் விற்பனை செய்யும் பெரிய வணிக நிறுவனங்களின், ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தனிப்பட்ட பொதுமக்கள் யுபிஐ சேவையைப் பயன்படுத்துவதற்கோ அல்லது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பணம் அனுப்புவதற்கோ எந்தவிதமான கட்டணமும் இல்லை. இது முழுக்க முழுக்க வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒருவேளை 0.4% MDR கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ரூ.10,000 பரிவர்த்தனைக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தத் தொகை வழங்கும் வங்கிக்கு - 40%, பிஐ செயலிக்கு - 30%, பணம் பெறும் வங்கிக்கு - 30% என்று பகிர்ந்தளிக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன

இந்த புதிய விதிமுறைகள் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை. தேசிய கொடுப்பனவுக் கழகம் இதற்கான நடைமுறைகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அடுத்த சில வாரங்களுக்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும், வணிகத் துறைகளின் தன்மைக்கேற்ப இந்த கட்டண விகிதங்கள் மாறுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
