தீபாவளிக்கு சொந்த ஊர் போறவங்க ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துக்கோங்க!

 
தீபாவளி ரயில்

 

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையானது நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய தினம் சனிக்கிழமை என்பதால், இந்த இரண்டு நாட்கள் விடுமுறையில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வெளியிடங்களில் இருந்து நெல்லை உள்ளிட்ட தங்கள் சொந்த ஊர்களுக்கு வரத் திட்டமிட்டு வருகின்றனர். தீபாவளியை ஒட்டிச் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் வருகிற 6ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

தீபாவளி

ரயில்களில் அறுபது நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையின்படி, நவம்பர் 5ஆம் தேதி அன்று சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்புவோர் வருகிற 6ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நவம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து புறப்பட விரும்புவோர், வருகிற 7ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்வார்கள் என்பதால் முக்கிய ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருக்கைகள் நிரம்ப வாய்ப்புள்ளது.

தீபாவளி

அதேபோல் மறுமார்க்கத்தில் தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்குச் செல்வோர் வருகிற 9ஆம் தேதி முதல் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி முடிந்து மறுதினமே பணிக்குச் செல்வோர் தீபாவளி தினமான நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே புறப்பட வேண்டும். பயணிகள் முன்கூட்டியே தங்களின் பயணத்தைத் திட்டமிட்டு உரிய நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்