அமைச்சர் உத்தரவை மீறி அட்ராசிட்டி... சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்திற்குள் புகுந்து தவெக தொண்டர்கள் அடாவடி!
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள சூழலில், "அரசு நிர்வாக விவகாரங்களில் மற்றும் அரசு அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் யாரும் தேவையற்ற முறையில் தலையிடக் கூடாது" என்று தவெக அமைச்சர்கள் தரப்பில் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமைச்சரின் இந்த அறிவுறுத்தலைத் தவெக தொண்டர்கள் சிலரே மீறி சென்னை மாநகராட்சி கூட்டத்திற்குள் அட்ராசிட்டி செய்துள்ள சம்பவம் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15-வது மண்டலக் குழு கூட்டம் இன்று வழக்கம்போல நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவண மூர்த்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைதீர்ப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்து வந்தனர்.
அப்போது, அமைச்சர் ஆனந்த் அவர்களின் கடுமையான உத்தரவையும் பொருட்படுத்தாமல், எம்.எல்.ஏ சரவண மூர்த்தியின் ஆதரவாளர்களான தவெக தொண்டர்கள் சிலர் திடீரென அந்த அரசு கூட்டத்திற்குள் நுழைந்தனர்.
கூட்டத்திற்குள் புகுந்த தவெக தொண்டர்கள் அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டதுடன், பின்வரும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் இருந்த மைக்ரோபோனை கையில் எடுத்து, அங்குப் பணியில் இருந்த அரசு அதிகாரிகளுக்குத் தங்களின் பாணியில் சில அறிவுரைகளையும், கட்டளைகளையும் பிறப்பிக்கத் தொடங்கினர்.
அதுமட்டுமன்றி, அரசு அதிகாரிகள் முன்னிலையிலேயே தங்களின் மொபைல் போன்களைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக 'ரீல்ஸ்' வீடியோக்களையும் எடுத்து அதிரடி காட்டியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டு விவாதிக்க வேண்டிய முக்கிய மண்டலக் கூட்டத்தில், அரசியல் கட்சியினர் அத்துமீறி நுழைந்து மைக் பிடித்துப் பேசியதும், வீடியோ எடுத்ததும் அங்கிருந்த அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கூட்டரங்கில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் சலசலப்பும் நிலவியது.
புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, கட்சியின் தலைமை மற்றும் அமைச்சர்களின் உத்தரவுகளை மீறித் தொண்டர்கள் அரசு கூட்டங்களில் இவ்வாறு நடந்துகொள்வது பொதுமக்களிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்களை எழுப்பத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தவெக தலைமை சம்பந்தப்பட்ட தொண்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
