’டிஜிட்டல் கைது’ என மிரட்டல்.. 75 வயது மூதாட்டியின் ரூ.2.4 கோடி வீடு பறிப்பு! 22 நாட்கள் நடந்த கொடூர மோசடி!

 
ஸ்கேம்

 

டெல்லியில் 75 வயது மூதாட்டியிடம் ‘டிஜிட்டல் கைது’ எனக் கூறி சைபர் மோசடி கும்பல் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து, நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வசந்த் குஞ்ச் பகுதியில் வசித்து வரும் அந்த மூதாட்டியை கடந்த ஏப்ரல் மாதம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள், அவரது மொபைல் எண் பணமோசடி வழக்குடன் தொடர்புடையதாக இருப்பதாக கூறியுள்ளனர்.

திருச்சியில் 'டிஜிட்டல் கைது' எனக்கூறி ரூ.17 லட்சம் மோசடி Rs 17 lakh swindled in Trichy via 'digital arrest' scam

இதனைத் தொடர்ந்து, வழக்கில் கைது செய்யப்படுவார் என்றும், அவரது குடும்பத்தினரும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் மிரட்டி உள்ளனர். தொடர்ந்து வீடியோ கால் மூலம் மூதாட்டியை கண்காணித்ததாக கூறப்படுகிறது.சுமார் 22 நாட்கள் நீடித்த இந்த மோசடியில், மூதாட்டியின் வங்கி கணக்கு, தங்க நகைகள் மற்றும் சொத்து விவரங்களை கும்பல் தெரிந்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது வீட்டின் ஆவணங்களையும் பெற்றுள்ளனர்.

ரூ.2.40 கோடி மதிப்பிலான வீட்டை விற்பனை செய்யும் வகையில் அவரை அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், சொத்து விற்பனை தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தங்க நகைகளை அடகு வைத்து அதன்மூலம் பெறப்பட்ட பணத்தையும் மோசடி கும்பல் பெற்றதாக கூறப்படுகிறது.

கோவை முதியவருக்கு டிஜிட்டல் கைது மிரட்டல்! ₹18 லட்சம் மோசடி முயற்சி: அதிர்ச்சியில் உறைந்த தம்பதி! | Coimbatore elderly man threatened with digital arrest! Attempted fraud of ₹18 lakh: Couple in shock!

மொத்தமாக ரூ.2.48 கோடிக்கும் அதிகமான தொகை மற்றும் சொத்து தொடர்பான இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி கும்பலின் செயல்பாடுகள் குறித்து டெல்லி போலீசார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையிலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சைபர் மோசடி கும்பல்கள் போலீஸ், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் பெயர்களை பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எந்தவொரு அரசு விசாரணை அமைப்பும் வீடியோ கால் மூலம் ஒருவரை ‘டிஜிட்டல் கைது’ செய்து பணம் செலுத்துமாறு உத்தரவிடாது என்பதால், இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக போலீசார் அல்லது சைபர் கிரைம் உதவி எண்ணை அணுகுவது அவசியம்.