பரபரப்பான ஆட்டம்...பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!

 
delhi delhi

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி நிர்ணயித்த 211 ரன்கள் என்ற கடினமான இலக்கை, டெல்லி அணி 19 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்து சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி தொடரில் தனது பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, பிரியான்ஷ் ஆர்யாவின் அதிரடி அரைசதத்தின் (56 ரன்கள்) உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, ஒரு கட்டத்தில் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், கேப்டன் அக்ஷர் படேல் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அக்ஷர் படேல் 30 பந்துகளில் 56 ரன்களும், மில்லர் 28 பந்துகளில் 51 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

இறுதிக்கட்டத்தில் அசுதோஷ் சர்மா மற்றும் மாதவ் திவாரி ஆகியோர் தங்களது பங்கிற்கு அதிரடி காட்ட, டெல்லி அணி 19 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள பஞ்சாப் அணிக்கு, பிளே-ஆஃப் சுற்றுக்குச் செல்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்லி அணியின் இந்த அபாரமான சேசிங் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.