இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

 
இளையராஜா

பதிப்புரிமை உத்தரவை மீறியதாகப் புகாரளித்து, இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சரிகமா நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி, தங்களுக்கு உரிமை உள்ள பாடல்களை இளையராஜா தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அவற்றின் மீது உரிமை கோரி வருவதாகவும் சரிகமா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, ‘முரட்டுக்காளை’ படத்தில் இடம்பெற்ற ‘பொதுவாக என் மனசு தங்கம்’ உள்ளிட்ட பாடல்கள் தொடர்பாக இளையராஜா உரிமை கோரி சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஸ்பாட்டிபை மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் இந்தப் பாடல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவை இளையராஜா வேண்டுமென்றே மீறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சரிகமா நிறுவனம், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி, அவற்றை விற்பனை செய்து கிடைக்கும் தொகையைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு உரிய பதிலளிக்குமாறு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.