'டெலிகிராம் தடை'க்கு எதிராக வழக்கு - அவசரமாக விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்!

 
முடங்கிய வாட்ஸ் அப்! தட்டி தூக்கிய டெலிகிராம்! முடங்கிய வாட்ஸ் அப்! தட்டி தூக்கிய டெலிகிராம்!

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு விதித்துள்ள தற்காலிகத் தடைக்கு எதிராக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நிலையில், முறைகேடுகள் மற்றும் போலி வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காக மத்திய அரசு இந்தத் தற்காலிகத் தடையை விதித்திருந்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கைத் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறைக்கால நீதிபதி தேஜஸ் காரியா இன்று அவசர வழக்காகப் பட்டியலிட்டு விசாரணைக்கு அனுமதித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’ அளித்த பரிந்துரையின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A-இன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

டெலிகிராமில் "PAPER LEAKED NEET", "Re-NEET 2026", "Private Mafia" போன்ற பெயர்களில் நூற்றுக்கணக்கான போலி சேனல்கள் உருவாக்கப்பட்டு, மாணவர்களிடம் வினாத்தாள்களைத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டு வந்தது.

டெலிகிராமின் 'மெசேஜ் எடிட்டிங்' வசதியைப் பயன்படுத்தி, தேர்வு முடிவடைந்த பிறகு பழைய பதிவுகளை மாற்றி, தாங்கள் தேர்வுக்கு முன்பே வினாத்தாளைக் கசியவிட்டது போன்ற மாயையை மோசடி கும்பல்கள் உருவாக்கி வந்தன. இதன் காரணமாக, ஜூன் 22 வரை டெலிகிராம் செயலியை இந்தியாவில் முழுமையாக முடக்கவும், அதன் எடிட்டிங் வசதியை ஜூன் 30 வரை முடக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது.

நீட்

இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ள டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவெல் துரோவ் தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அரசின் முடிவிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். "இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களை இந்தத் தடை தண்டிப்பதாக அமைந்துள்ளது. வினாத்தாள் மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் மற்ற செயலிகளுக்கு மாறிவிடுவார்கள் என்பதால், செயலியை முடக்குவது தீர்வாகாது. கடந்த சில வாரங்களில் வினாத்தாள் கசிவு தொடர்பான நூற்றுக்கணக்கான சேனல்களை நாங்கள் நீக்கியுள்ளோம். தற்காலிகமாக இருந்தாலும் டெலிகிராமைத் தடை செய்தது ஒரு தவறான முடிவு."

மத்திய அரசின் இந்தத் தளம் தழுவிய தடைக்கு எதிராகத் டெலிகிராம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிடவுள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் தங்களின் கல்விசார் பயன்பாட்டிற்கு இச்செயலியை நம்பியிருக்கும் சூழலில், ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பது தங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக டெலிகிராம் தரப்பில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிபதி தேஜஸ் காரியா முன்னிலையில் இன்று நடைபெறவுள்ள இந்த விசாரணையின் முடிவு, டிஜிட்டல் தளங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.