தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்: பட்டாசு வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

 
தீபாவளி

 

டெல்லியின் நரேலா பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 8-ம் தேதி இரவு, தனது வீட்டின் முன்பு சிறுவன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது கையில் வைத்திருந்த பூந்தொட்டி வகை பட்டாசு (அனார்) எதிர்பாராதவிதமாக வெடித்ததில் அவரது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

இதற்கிடையே, சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் உயிருடன் இருந்ததாகவும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், மருத்துவமனை தரப்பில் சிறுவன் உயிரிழந்த நிலையிலேயே கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், பட்டாசு வெடித்த விபத்தின் சூழல் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.