பெண் பத்திரிகையாளருக்குப் பாலியல் தொல்லை தந்த காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு - டெல்லியில் சர்ச்சை!
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிக்குத் தற்காலிகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ், சிஜேபி மற்றும் மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் யோகேந்திரா யாதவ், பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 3 பெண் பத்திரிகையாளர்கள், தங்களை டெல்லி காவல்துறை அதிகாரிகள் பாலியல் தொல்லைக்குள்ளாக்கியதாகக் கூறி அதிர்ச்சிப் புகாரை அளித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், "பார்லிமெண்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு வெளியே பல மணிநேரம் அமர்ந்து எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வலியுறுத்தினேன், ஆனால் காவல்துறை அதற்கு முன்வரவில்லை" என்று குற்றம்சாட்டினார். இந்திய பிரஸ் கிளப் உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகள் இதற்குைக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இப்புகாரில் இடம்பெற்றுள்ள டெல்லி காவல்துறையின் உதவி ஆணையாளர் விவேக் பகத் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, தற்போது கூடுதல் துணை ஆணையாளராக தற்காலிகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் முழுமையான நிரந்தரப் பதவிகளை நிரப்பும் வரை இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று கூறப்பட்டாலும், கடுமையான பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
