டெல்லியில் டீன் ஏஜ் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை... உடலை நாய்கள் கடித்து குதறிய கொடூரம்!

 
டெல்லி

 

 டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயல்வெளியில் சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் 3 சிறார்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள குஷாக் சாலைக்கு அருகே வயல்வெளியில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மிகவும் சிதைந்த நிலையில் உடலை மீட்டனர். உடல் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால், ஆரம்பத்தில் உயிரிழந்தவர் பெண்ணா, ஆணா என்பதைக்கூட உடனடியாக கண்டறிய முடியாத நிலை இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் வயல்வெளியில் கிடந்தபோது தெருநாய்கள் மற்றும் பிற விலங்குகள் அதனை சேதப்படுத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சிறுமிக்கு தெரிந்த 17 வயது சிறுவன் ஒருவரும் சந்தேக நபர்களில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருடன் தொடர்புடைய மற்றவர்களும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பாக போலீசார் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்ததாக சந்தேகிக்கப்படும் நேரத்தில் ஒரு டெம்போ வாகனம் சந்தேகத்திற்கிடமான வகையில் அந்தப் பகுதியில் சென்றது தெரியவந்ததாக போலீசார் கூறினர். அதன் மூலம் விசாரணையைத் தொடர்ந்து வாகனத்தை அடையாளம் கண்டு, ஓட்டுநரை பிடித்து விசாரித்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மற்ற 3 பேரையும் போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 19 வயது நபர் என்றும், மற்ற 3 பேர் சிறார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கத்திகள் மற்றும் ரத்தக்கறை படிந்த ஆடைகளும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளுடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டமான போக்சோ (POCSO) சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி உயிரிழந்ததற்கான முழுமையான காரணம், சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.