டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம்... குழந்தை உட்பட 2 பேர் பலி!

 
டெல்லி

 

டெல்லியில் இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள ஜ்வாலா நகரில் இன்று (நவம்பர் 17) காலை இந்த விபத்து நிகழ்ந்தது. சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் அந்தக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில், உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 வயது குழந்தை மற்றும் 35 வயது நபர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், 4 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.கட்டிடம் பல ஆண்டுகளாக விரிசல்களுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடம் இடிந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.