கோடிக்கணக்கான சொத்துக்காக டெல்லி பேராசிரியை கொலை!

 
west bengal west bengal

 

டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணையில் இறங்கினர்.

ஆம்புலன்ஸ்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மேற்கு வங்காள மாநிலம் பர்த்வான் பகுதியில் உள்ள தேபோஸ்மிதா பாலின் பூர்வீக சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ராம்பிரசாத் தாஸ் மற்றும் அவரது மனைவி பானஸ்ரீ தாஸ் ஆகியோரை காலி செய்யுமாறு பேராசிரியை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தங்களது வாடகைதாரர் தம்பதி, பேராசிரியையைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து சுமார் 1400 கிலோமீட்டர் தூரம் பயணித்து டெல்லிக்கு வந்த தம்பதி, சந்தேகத்தைத் தவிர்க்க தங்களது சிறு வயது மகனையும் உடன் அழைத்து வந்துள்ளனர். குடியிருப்பின் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார், அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்குத் தப்பிச் சென்றதை அறிந்தனர். உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.