தீவிரமடையும் போராட்டம்... டெல்லியில் கூடுதல் படைகள் குவிகிறதால் பதற்றம் பலமடங்கு அதிகரிப்பு!
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி நடத்தினர். பேரணியைத் தடுக்கக் காவல் துறையினர் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சால் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்ந்தனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலால் டெல்லியில் பதற்றம் அதிகரித்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளன.
தலைநகரில் சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும் வன்முறை அசம்பாவிதங்களைத் தடுக்கவும் கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து கொல்கத்தாவில் இருந்து 20 சிஆர்பிஎப் கம்பெனி வீரர்கள் அவசர அவசரமாக விமானம் மூலம் டெல்லிக்கு வரவழைக்கப்படுகின்றனர். ஏற்கனவே பாதுகாப்புப் பணிக்காக 30 சிஆர்பிஎப் கம்பெனி வீரர்களும் விரைவு அதிரடிப் படைகளும் அங்குப் பணியமர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கூடுதல் படைகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருவதால் நகர் முழுவதும் உச்சகட்டப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரு சிஆர்பிஎப் கம்பெனியில் சுமார் 100 வீரர்கள் வரை இடம்பெற்றுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் இளைஞர்கள் டெல்லியில் பெருந்திரளாகக் குவிந்து வருவதால் பெரும் சலசலப்பு நிலவுகிறது. போராட்டக்காரர்கள் மேலும் பரவாமல் தடுக்க நகரின் முக்கிய எல்லைகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
