ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரசவம்.. துரிதமாகச் செயல்பட்ட பெண் அதிகாரி - தாயும் சேயும் நலம்!
கேரளா மற்றும் ஆந்திரா இடையே பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலில், உயிருக்குப் போராடிய கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெற ரயில்வே ஊழியர்கள் உதவியுள்ளனர்.
கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நோக்கிச் செல்லும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் பி1 பெட்டியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் பயணம் செய்தார். ரயில் ஆந்திராவின் அன்னாவரம் நிலையத்தைத் தாண்டிய சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணுக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது.

பயணிகள் மத்தியில் பதற்றம் நிலவிய சூழலில், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக ரயிலில் பணியிலிருந்த விஜயவாடா பிரிவைச் சேர்ந்த பெண் டிக்கெட் பரிசோதகர் ஜோதி என்பவரை அணுகினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜோதி, சற்றும் தாமதிக்காமல் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததுடன், ரயிலிலேயே முதலுதவி மற்றும் பிரசவத்திற்கான அவசர ஏற்பாடுகளைச் செய்தார்.
சக பயணிகளின் உதவியுடனும், அதிகாரிகளின் வழிகாட்டுதலுடனும் ரயிலிலேயே அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாய்க்கும் குழந்தைக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், அவசரச் சூழலைக் கருத்தில் கொண்டு இலமஞ்சிலி ரயில் நிலையத்தில் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
ரயில்வே ஊழியர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுத் தாயும் சேயும் பாதுகாப்பாக இலமஞ்சிலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சரியான நேரத்தில் முடிவெடுத்து, ஒரு உயிரைக் காக்க உதவிய பெண் அதிகாரி ஜோதி மற்றும் ரயில்வே ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
