நெகிழ்ச்சி... வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்... ஆம்புலன்சிலேயே சுகப்பிரசவம்!

 
108

 

புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொண்ணு என்ற 32 வயது நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர், கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பெண்ணுக்குப் பிரசவ வலி மிக தீவிரமடைந்ததால், தாமதிக்காமல் வண்டியைப் பாதுகாப்பான ஓரிடத்தில் நிறுத்த மருத்துவக் குழு முடிவு செய்தது. மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் உரிய ஆலோசனைகளைப் பெற்று ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவசரப் பிரசவம் பார்க்கப்பட்டது. மருத்துவப் பணியாளர்களின் சாதுர்யமான மற்றும் துரிதமான செயல்பாட்டால் அப்பெண்ணுக்குச் சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

முதலுதவிகள் அனைத்தும் வெற்றிகரமாகச் செய்யப்பட்ட பின்னர், தாயும் சேயும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் சேயும் மிகவும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய துரிதமாகச் செயல்பட்ட மருத்துவக் குழுவினருக்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.