தலைமைச் செயலகம் முன் டெல்டா விவசாயிகள் சாலை மறியல்!
தவெக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம்பெறாததைக் கண்டித்து, டெல்டா பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மே 10 அன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற நிலையில், ஆகஸ்ட் 5 அன்று பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6 அன்று வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் முற்றிலும் இடம்பெறாதது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சென்னை தலைமைச் செயலகம் முன்பாகச் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தங்களின் ஏமாற்றத்தைப் பதிவு செய்யும் வகையில் கோணிப் பைகளை அணிந்து வந்த விவசாயிகள், "விவசாயிகளின் குரலைக் கேளுங்கள்", "பயிர்க்கடனை உடனடியாகத் தள்ளுபடி செய்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தலைமைச் செயலகப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட டெல்டா விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
