‘ஜனநாயகன்’ படத் திருட்டு விவகாரம்... உதவி எடிட்டர் உட்பட 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் திருட்டுப் பிரதியை இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. சைபர் கிரைம் போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்தது. இதுகுறித்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் (Post-production) நடைபெற்ற ஸ்டுடியோவில் உதவி எடிட்டராகப் பணிபுரிந்த பிரசாந்த் என்பவர், படத்தின் அசல் கோப்பைத் திருடி வெளியில் உள்ள தனது கூட்டாளிகளுக்குக் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திரைப்படத் திருட்டு நெட்வொர்க்குடன் தொடர்புடையதாக இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில், இந்தத் திருட்டுச் சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்ட முக்கியக் குற்றவாளிகளான பிரசாந்த் (உதவி எடிட்டர்), செல்வம், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபடி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்களை இணையதளங்களில் கசியவிட்டு, சினிமாத் துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் திருட்டு நெட்வொர்க்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சைபர் கிரைம் போலீஸார் இந்த மிகக் கடுமையான சட்டப் பிரிவைப் பயன்படுத்தியுள்ளனர்.
