'ஜனநாயகன்' ரிலீஸ்... தியேட்டரில் பட்டாசு வெடித்த ரசிகர்கள்; பெங்களூருவில் பரபரப்பு!
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகியுள்ள நிலையில், திரையரங்கிற்குள் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரை உலகிலும் அரசியல் களத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'ஜனநாயகன்' திரைப்படம் உலகளவில் திரைக்கு வந்துள்ளது.
கேரளா, கர்நாடகா (பெங்களூரு) உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இன்று காலை 6 மணிக்கே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. திரையரங்குகளின் வெளியே பேனர்கள் வைத்தும், மேளதாளங்கள் முழங்க நடனமாடியும் ரசிகர்கள் பட வெளியீட்டைத் திருவிழா போலக் கொண்டாடினர்.

பெங்களூருவில் உள்ள குறிப்பிட்ட ஒரு திரையரங்கில் படம் திரையிடப்பட்டபோது எல்லை மீறிய கொண்டாட்ட நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் திரையில் தோன்றும் காட்சியைக் கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் சிலர், திரையரங்கத்தின் உள்ளேயே பட்டாசுகளைக் கொளுத்தி வெடித்துள்ளனர்.
திரையரங்கு அரங்கிற்குள் புகையும் சத்தமும் சூழ்ந்ததால் அங்கிருந்த மற்ற பார்வையாளர்களும் திரையரங்க நிர்வாகத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
