'ஜனநாயகன்' படம் லீக் விவகாரம் - மேலும் ஒருவர் கைது- சிக்கியவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்வு!

 
ஜனநாயகன்   ஜனநாயகன்  

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்த வழக்கில், மாநில சைபர் கிரைம் போலீசார் தற்பொழுது மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

சுமார் 380 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை வாரியத்தின் சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது.

ஜனநாயகன்

இத்தகைய இக்கட்டான சூழலில், கடந்த ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் யாரும் எதிர்பாராத விதமாக 3 மணி நேரம் கொண்ட முழுத் திரைப்படமும், உயர் தரத்தில்  சில குறிப்பிட்ட இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் சட்டவிரோதமாகக் கசிந்து ஒட்டுமொத்தத் திரை உலகிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படக்குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை அசோக் நகர் போலீசாரும், மாநில சைபர் கிரைம் பிரிவு போலீசாரும் இணைந்து தீவிரப் புலனாய்வில் ஈடுபட்டனர். இதில் தொழில்நுட்பக் குறியீடுகளை ஆய்வு செய்ததில், சென்னை திலகர் நகரைச் சேர்ந்த உமா சங்கர் உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

ஜனநாயகன்

ஏற்கனவே இந்த வழக்கில் அடுத்தடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்தத் திருட்டுச் சங்கிலியில் தொடர்புடைய மற்றுமொரு நபரைக் காவல்துறையினர் தற்பொழுது அடையாளம் கண்டுள்ளனர்.

தலைமறைவாக இருந்த அந்தப் புதிய குற்றவாளியை இன்று  காலை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். அவரிடம் தற்பொழுது ரகசிய இடத்தில் வைத்து, படத்தொகுப்பு அல்லது சென்சார் நகல் பெறப்பட்ட இடத்திலிருந்து இந்தத் தரவுகள் எவ்வாறு திருடப்பட்டன, இதன் பின்னணியில் ஏதேனும் திட்டமிட்ட அரசியல் சதி உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.