‘ஜனநாயகன்’ படம் லீக்கான விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் முறையீடு! “மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணை” - நீதிபதி அதிரடி!

 
ஜனநாயகன் ஜனநாயகன்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இப்படத்தைத் தயாரித்துள்ள KVN Productions நிறுவனம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்ததாகவும், இதனால் படத்திற்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் நீதிபதியிடம் முறையிட்டார். இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக முறையான மனுவைத் தாக்கல் செய்தால், அதனை அவசர வழக்காக ஏற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி உதயகுமார் அளித்த புகாரின் பேரில், தமிழக சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஜனநாயகன்

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 6 நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளதாகவும், சுமார் 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையதள லிங்குகளை முடக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தணிக்கை வாரியத்தில் (CBFC) இருந்தே படம் கசிந்ததாக எழுந்த புகாரை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தணிக்கைக்கு வரும் படங்கள் அனைத்தும் பாஸ்வேர்டு பாதுகாக்கப்பட்ட (KDM) தொழில்நுட்பத்தில் இருப்பதாகவும், மார்ச் 17-லேயே படத்தின் நகல் தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் விஜய்

திரைப்படம் வெளியாவதற்கு முன்பே முழுப்படமும் ஹெச்டி (HD) தரத்தில் லீக் ஆனதற்குக் கமல் ஹாசன், ரஜினிகான்ந்த், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் இப்படம் பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியாகத் தயாராகி வரும் நிலையில், இந்த லீக் விவகாரம் படக்குழுவினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.