சென்னையில் வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவல் - 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!
சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவொற்றியூர் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகச் சென்னை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவுமாகச் சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை முழுமையாகத் தடுக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவர்களைக் கொண்ட 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.
காய்ச்சல் அல்லது உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள இந்த மருத்துவ முகாம்களைத் தவறாமல் பயன்படுத்தித் தகுந்த பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மழைக்கால நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
