சென்னையில் டெங்கு பரவல் தீவிரம் - 18 நாட்களில் 614 பேருக்கு பாதிப்பு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு!

 
இந்தியாவின் டெங்கு தடுப்பூசி QDENGA

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலங்களில் தேங்கும் சுத்தமான நீரில் உருவாகும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலம் டெங்கு நோய் பரவுகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்னரே தற்போது பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

டெங்கு

அண்ணா பல்கலைக்கழக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவரும், திருவண்ணாமலையைச் சேர்ந்தவருமான ஹரிஷ்குமார் (21) என்பவர் காய்ச்சல் காரணமாகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவரான ஆனந்தராஜும் காய்ச்சல் பாதிப்புடன் அரசுப் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மேலும் ஒரு மாணவிக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர் ஹரிஷ்குமாருக்கு 'ஸ்கிரப் டைபஸ்' எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தாவரங்களில் வளரும் ஒருவகை உண்ணிப் பூச்சி கடிப்பதால் இந்தக் காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 100 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுத் தீவிர சுகாதாரப் பணிகள் மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பொதுச் சுகாதார முகாமில் 70 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் சுயமாக மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

டெங்கு

சென்னையில் முன்பு மாதத்திற்கு 200-க்கும் குறைவாக இருந்த டெங்கு பாதிப்பு, ஆகஸ்ட் மாதத்தில் 605 ஆகவும், செப்டம்பர் மாதத்தில் இதுவரை 614 ஆகவும் ராட்சத வேகத்தில் அதிகரித்துள்ளது. இந்த பாதிப்பு இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தினமும் 80-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக வருகின்றனர். ரத்தப் பரிசோதனையில் டெங்கு உறுதி செய்யப்படுவோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 95 பேர் டெங்குவாலும், 350-க்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 177 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்போரூர் மற்றும் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால், 950 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மற்றும் 8 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தீவிரத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.