மேகமலையில் ஆக்கிரமிப்பு - 118 அரசு அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை!
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் 118 அரசு அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வனத்துறைக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் பட்டியலில் காவல்துறை, வனத்துறை மற்றும் பிற அரசுத் துறைகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதில் 20 காவலர்கள், 13 வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் உள்ளிட்ட 118 பேரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

பட்டியலில் இடம்பெற்றுள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் தாங்கள் ஆக்கிரமித்துள்ள வனநிலங்களை எவ்வித எதிர்ப்பும் இன்றித் தாமாக முன்வந்து வனத்துறையிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலங்களைத் திரும்ப ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில், அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளும், சட்டப்பூர்வ மேல்நடவடிக்கைகளும் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகப் பகுதியில் அரசு அதிகாரிகளே ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
